விஜயவாடா
ஆந்திர மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செலுத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி புரிந்து வருகிறார். அவர் பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அவ்வகையில் ஜெகனண்ணா அம்மா வோடி என்னும் திட்டத்தை முன்பு அறிமுகம் செய்தார். இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளை 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு அனுப்பும் ஏழைத் தாய்மார்களுக்கு வருடத்துக்கு அரசு ரூ.15000 வழங்கி வருகிறது.
தற்போது பொறியியல் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை 100% திருப்பி அளிக்க ஜெகனண்ணா வித்யா தீவெனா என்னும் புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி, “எந்த ஒரு அரசு கல்விக்கட்டணத்தை இவ்வாறு திருப்பித் தந்ததில்லை. இந்த திட்டத்துக்கு ரூ. 4000 கோடி ஒதுக்கபட்டுள்ளது. அத்துடன் முந்தைய அரசு வழங்க வேண்டிய ரூ.1880 கோடியையும் விடுவிக்க உத்தரவு இட்டுள்ளோம்
கல்வி தேவைப்படும் மாணவர்களுக்குக் குறிப்பாக ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி கற்றல் என்பது சாத்தியம் ஆக வேண்டும். ஒரு குழந்தைக்கு நம்மால் அளிக்கக் கூடிய மிகச் சிறந்த செல்வம் கல்வி ஆகும். எங்கள் அரசு அதை நோக்கி பயணம் செய்கிறது இந்த திட்டத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள்” என அறிவித்துள்ளார்.