அமராவதி
ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்குச் சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடுவை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு நந்தியால் பகுதி போலீஸ் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான காவல்துறையினர் இன்று அதிகாலை 3 மணிக்கு சந்திரபாபுவைக் கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றனர்.
சந்திரபாபு வீட்டின் முன் கூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அவரை அழைத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று எஸ்பிஜி படைப்பிரிவினர் தெரிவித்தனர்.
காலை 6 மணி வரை காவல்துறையினர் காத்திருந்து சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்தனர். காவல்துறையினரால் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அழைத்துச் செல்லப்பட்டார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.