திருப்பதி:
 ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களுக்கு ஜாமீன் கோரி தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.
கடந்த 4ந்தேதி இரவு ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் 32 தமிழர்களை ஆந்திர அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
andra
ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, இவர்களை கைது செய்து திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளளதாக கூறப்படுகிறது.
இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள  அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும்,  கைதானவர்களை உடனே  மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி வந்தனர்.
இதையடுத்து, கைதான 32 தமிழர்களையும் ஜாமீனில் எடுக்க தேவையான சட்ட உதவிகளை செய்வதற்கு மூத்த வழக்குரைஞர் முகமது ரியாஸ் மற்றும் அருளை தமிழக அரசு நியமித்துள்ளது.
வழக்கறிஞர்கள் 2 பேரும் இன்று திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் கைதான 32 பேரின் உறவினர்களை சந்தித்து விசாரித்தனர். இதையடுத்து இன்று மாலை நீதிமன்றத்துக்குச் சென்று 32 தமிழர்கள் சார்பில் ஜாமீன்  கேட்டு மனுத்தாக்கல் செய்கின்றனர்.