“ஆண்டாள் என் தாய்! நான் ஏன் அவளை இழிவுபடுத்த வேண்டும்?” என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவின் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
” ஆண்டாளை அவரது காலப் பின்னணியில், சமூகத்தின் கண்ணோட்டத்திலும், மதத்தின் கண்ணோட்டத்திலும் வைத்து ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கிறேன்.
ஒரு வைணவனைக் காட்டிலும் அவரது தமிழுக்குள் ஆழமாகச் சென்றுள்ளேன். ஆண்டாளின் தமிழை மட்டுமே நான் கொண்டாடவில்லை. பெண் உரிமையின் முதல் குரலாக அவரை நான் பார்க்கிறேன்.
நான் கொடுத்த மேற்கோளில் உள்ள “தேவதாசி ” எனும் சொல், தற்காலத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அஞ்சினேன். ஆகவே அது பற்றி விரிவாகக் குறிப்பட்டேன்.
பக்தர்கள் உடனடியாக இதைப் புரிந்து கொள்ள இயலாது. ஆனால், அவர்கள் சூழலை ( context ) புரிந்து கொண்டால், அதை ஏற்றுக் கொள்வார்கள்.
நான் “தாசி” என்ற சொல்லைச் சரியான பொருளில்தான் பயன்படுத்தினேன். ஆனால் நான் பயந்த்து போலவே நடந்துவிட்டது.
சிலர் அதை ” வேசி” என்பதாகத் தவறாகப் புரிந்து கொண்டனர்.
நான் சுட்டிக்காட்டிய மேற்கோள், கேள்விக்கு உள்ளாக்கப்படவோ, ஏற்கப்படவோ இல்லை. நான் பயன்படுத்திய மூலக்கருத்து தவறில்லை என்றால், நான் சுட்டிய மேற்கோள் மட்டும் எப்படித் தவறாக முடியும்?
ஆண்டாளை இழிவுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சிறிதும இல்லை. அதற்காக அம்மேற்கோளை நான் பயன்படுத்தவில்லை.
ஆண்டாள் எனது தாய். எனது அன்னையை எவ்வாறு என்னால் இழிவு படுத்த முடியும்?
அரசியல் நிர்ப்பந்தங்களுக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ இது முழுவதும் வேண்டுமென்றே இந்த விசயம் திரிக்கப்பட்டுள்ளதா என்பது எனக்குத் தெரியாது.
நான் வருத்தம் தெரிவித்து விட்டேன். இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்?
ஆண்டாளை இழிவுபடுத்த வேண்டும் என நான் விரும்பியிருந்தால், அவரது பிறந்த இடத்திற்கே சென்று நான் சொற்பொழிவு ஆற்றியிருப்பேனா? நான் கற்ற தமிழ் மூலம் அவரது இலக்கியப் பங்களிப்பு குறித்துப் பாராட்ட விரும்பினேன்.
உள்ளபடியே சொல்லப்போனால், ஆண்டாளது படைப்புக்களை ஒரு பகுத்தறிவாளன் இந்த அளவுக்குச் சிறப்பாகப் பாராட்டுவது இதுதான் முதல் முறையாகும்.
எனது பணியில் நான் உண்மையாக இருந்துள்ளேன். மேலும், நீதி என் பக்கம் உள்ளது ” என அந்தப் பேட்டியில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.