விருதுநகர்:

வைரமுத்து மன்னிப்பு கோரி நேற்று முதல் இரண்டாவது முறையாக உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்ரீவில்லி புத்தூர் ஜீயர் இன்று, தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளார்.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்ததாகவும், அதன் காரணமாக அவர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை  நேற்று 2வது முறையாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

நேற்று அவர் உண்ணாவிரதம் தொடங்கியபோது அவருக்கு ஆதரவாக இருந்த ஒருசிலரும், இன்று அங்கிருந்து சென்றுவிட்டதால், இன்று காலை முதல் தன்னந்தனியே உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், இன்று காலை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்பட பலர் சந்தித்து, ஜீயரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து,  தனது உண்ணாவிரதத்தை ஜீயர் வாபஸ் பெற்றுள்ளார்.

இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜீயர் தெரிவித்துள்ளார்.

ராமானுஜ ஜீயர் கடந்த மாதம் 17ம் தேதி ஆண்டாள் சர்ச்சை குறித்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதன் முறையாக உண்ணாவிரதம் இருந்து, அடுத்த நாளே வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.