ஈராக் நாட்டில் 2003 ம் ஆண்டு நடந்த அமெரிக்க படையெடுப்புக்குப் பின் அங்கிருந்த ஆயிரக்கணக்கான சிலைகள், வேலைப்பாடுகள் மற்றும் பொக்கிஷங்கள் களவு போனதாகவும், திருடி விற்கப்பட்டதாகவும் கூறப்பட்டுவந்தது.

உலகின் பழமையான நாகரீகங்களில் ஒன்றான மெசபடோமியா பகுதியில் இருந்து காணாமல் போன 17,000 க்கும் அதிகமான கலைநயமிக்க இந்த அரிய பொருட்களை ஈராக்கிடம் அமெரிக்கா திரும்ப அளிக்க இருப்பதாக ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் பாஃத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால சிற்பங்கள், கல்வெட்டுகள் என்று பலவற்றை திருடிய சிலை கடத்தல் கும்பல் சர்வதேச சந்தையில் விற்றுப் பணம் பார்த்ததாகவும், 2014 முதல் 2017 வரை ஈராக்கின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து செயல்பட்டுவந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு இந்த கடத்தலில் பெரும்பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிலை கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்த ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி இதுகுறித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து 17231 பொருட்களை அமெரிக்காவிலிருந்து மீட்ட நிலையில், ஜப்பான், நெதர்லாந்து மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 17 பொருட்களை மீட்டுள்ளது.

செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் இவற்றை கலாச்சாரத் துறை அமைச்சரிடம் ஒப்படைத்தார்.