சென்னை; தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நெல்கொள்முதல் நிலையங்கள் முறையாக பராரிக்கப்படாததால், விவசாயிகளிடம் வாங்கும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் நெல்கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க வேண்டும் என்றும், அவை பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஷெட் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், நெல்கொள்முதல் நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்க்க மறைமுக முயற்சி நடைபெறுவதாக விவசாயிகளின் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த நிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல், மழை நீரில் நனைந்து வீணாவதை தடுக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காகவே 2022-23-ம் ஆண்டை வேளாண் விளை பொருட்கள் கொள்முதல் கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பாண்டாக அறிவித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நடப்பாண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் பா.ம.க. யோசனை தெரிவித்திருந்தது. அதன் முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு இப்போதாவது புரிந்துகொண்டு கொள்முதல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,500 ஆக உயர்த்தப்பட வேண்டும், கிடங்குகளின் எண்ணிக்கை 400 ஆகவும், கொள்ளளவு 30 லட்சம் டன்னாகவும் உயர்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தது 5000 மூட்டைகள் சேமித்து வைப்பதற்கு வசதிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளார்