டில்லி:
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கு வந்திருந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸை “ அன்புமணியே திருப்பிப்போ!” என்று ஆக்ரோஷமாக முழக்கம் எழுப்பியபடியே மாணவர்கள் நெட்டியத்தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
அப்போது அன்புமணியை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு, “கோ பேக் அன்புமணி” ( அன்புமணியே திரும்பிப்போ” ) என்று முழக்கமிட்டார்கள்.
ஆனாலும், தனது காரில் இருந்து இறங்கிய அன்புமணி கருத்தரங்கு நடைபெறவிருந்த இடத்திற்கு வேகமாக நடந்து சென்றார். . அவரை உள்ளே செல்ல விடாமல் கோஷமிட்டபடியே மாணவர்கள் நெட்டித்தள்ளினர். இந்த நெருக்கடியால் அன்புமணி நிலைகுலைந்தார்.
பிறகு ஒருவழியாக கருத்தரங்க அரங்கிற்குள் சென்றார் அன்புமணி.
அன்புமணிக்கு எதிரான இந்த போராட்டத்தை ஜே.என்.யூ. மாணவர் சங்கம் நடத்தியதாக அறிவித்துள்ளது. “அன்புமணியின் சாதி வெறி அரசியலே அவருக்கு எதிரான போராட்டம் நடத்த காரணம். தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் நாய்க்கன் கொட்டாய் பகுதியில் நடந்த சாதி வெறி நடவடிக்கைகளே அவரது சாதி வெறிக்கு உதாரணம்” என்று ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.