சென்னை: 42 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன நாகை மாவட்டம்  அனந்தமங்கலம் கோவில் சுவாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அந்த சிலைகளை கோவில்நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

 நாகப்பட்டினம் ராஜகோபால சுவாமி கோவிலில் விஜயநகர பேரரசு காலத்தைச் (கி.பி.1500-ம் ஆண்டு காலத்தவை) சேர்ந்த ராமர், சீதை மற்றும் லட்சுமணன் வெண்கல சிலைகள் 1978-ம் ஆண்டில் திருடு போனது. இந்த சிலைகள் லண்டனில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிலைகளை மீட்பதற்காக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், இந்திய தொல்லியல் துறையின் புராதன பொருட்கள் பிரிவு இயக்குனர் மூலம் லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் லண்டன் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு சிலை விற்பனையாளரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு 3 சிலைகளும் கைப்பற்றப்பட்டன. இதன்பின்னர் உரிய நடைமுறைகளுக்கு பிறகு, 3 சிலைகளும் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டன. இதன்பிறகு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த சிலைகள் நேற்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து  சென்னை வந்த சிலைகள், சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.  அவரது வீட்டில் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் வெண்கல சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. முதலமைச்சர் வழிப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, சிலைகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக போலீசாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். மீட்கப்பட்ட ராமர் மற்றும் லட்சுமணன் சிலைகள் தலா 30 கிலோவும், சீதை சிலை 25 கிலோவும் எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அந்த சிலைகள் நாகை மாவட்டம் அனந்தமங்கலத்திலுள்ள ராஜகோபால பெருமாள் கோயில் செயல் அலுவலர் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்தார்.