பெங்களூரு:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே விமர்சித்துப் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் மத்திய ஆற்றல் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை அமைச்சராக இருக்கிறார். இவர் கர்நாடகாவிலிருந்து 5 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இவரது பேச்சு சமீபகாலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வருகிறது.
தற்போது ராகுல் காந்திக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதல்களை அனந்த் குமார் ஹெக்டே தொடுத்துள்ளார்.
ராகுல்காந்தி பிராமணர் என்பதற்கு டிஎன்ஏ ஆதாரத்தை தரமுடியுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர், முஸ்லிம் தந்தைக்கும் கிறிஸ்துவ தாய்க்கும் பிறந்த ராகுல் காந்தி எப்படி பிராமணர் ஆக முடியும் என கேட்டுள்ளார்.
இதனை தான் நகைச்சுவைக்காக சொல்லவில்லை என்றும் உண்மையாகவே சொல்வதாகவும் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தியை முஸ்லிம் என்று சொன்னதற்கும் அவரே விளக்கம் அளித்துள்ளார். ராஜீவ் காந்தியின் தந்தை பெரோஸ் காந்தி குஜராத்தைச் சேர்ந்த பார்சி. எனினும் பெரோஸ் காந்தி முஸ்லிம் என அழைக்கப்படுகிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய விமானப் படை தாக்குதலின் ஆதாரத்தை கேட்கும் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து பேசிய அவர், அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அனைத்துக்கும் இந்த தாக்குதல் குறித்து தெரிந்திருக்கும்போது, காங்கிரஸார் ஆதாரம் கேட்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
ராகுல் காந்திக்கு இந்த நாட்டைப் பற்றி தெரியாது. இந்து மதத்தை பற்றிய ஞானம் இல்லை. காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் அவர் பொதுக்கூட்டத்தில் பேசினார்.