புதுடெல்லி:
இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். அவர் செய்யும் டிவிட்கள் பலரது கவனத்தை ஈர்க்கும். அது போன்ற ஒரு கருத்தை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளை காடுகளில் அமைக்கும் போது ஏராளமான மாரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. விலங்குகள் பல நேரங்களில் சாலைகளை கடக்கும் போது வாகங்களில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகளும் ஏற்படுவதாக கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், நெதர்லாந்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் விலங்குகள் சாலையை கடப்பதற்கு வசதியாக பாதுகாப்பான சாலைகள் அமைக்கப்பட்டுள்ள படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டேக் செய்துள்ளார். இந்தியாவில் வனப்பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் இது போன்று அமைத்தால் நான் நிதின் கட்கரிக்கு மிகப்பெரிய பாரட்டை தெரிவிப்பேன் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இதற்கு டிவிட்டரில் பதிலளித்த நிதின் கட்கரி ஆனந்த் மஹிந்திராவின் யோசனைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்றும் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மாநிலங்களுக்கிடையே உள்ள NH44-இல் இதுபோன்று ஒரு புதிய முயற்சியை நாங்கள் செய்துள்ளோம் என்று அந்த படத்தையும் பதிவிட்டுள்ளார். வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பரிசோதனை அடிப்படையிலான முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என்றும் மேலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான் வாழ்வு மேம்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.