டில்லி

பிரபல பொருளாதார நிபுணர் வரப்போகும் வங்கிகள் சட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

வங்கிகளின் சீரமைப்புக்காக புதிய சட்ட வடிவம் அமைக்க மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.  இதன் மூலம் வங்கிகள் நஷ்டம் அடைவதையும், மக்களின் பணம் பத்திரமாக இருப்பதற்காகவும் வங்கிகளுக்கு சில உரிமைகள் வழங்கவும் சட்டம் இயற்ற ஒரு அமைப்பு அமைக்கப்பட்டது.  அந்தச் சட்ட அமைப்பு வடிவமைக்க உள்ள சட்டங்கள் குறித்து பிரபல பொருளாதார நிபுணர் முரளீதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

முரளீதரன், “எதிர்பாராத பண இழப்பு ஏற்படும் போது பொருளாதார நிறுவனங்கள் நஷ்டம் அடையாமல் தவிர்க்க இரு வழிகள் உள்ளது.  அதில் ஒன்று முதலீடு செய்தவர்கள் மற்றும் கடன் கொடுத்தவர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளை அளிப்பது.  இன்னொன்று நிறுவனத்தின் நஷ்டங்களை அரசு நிதி மூலம் அதாவது வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து ஈடு கட்டுவது.  பொதுவாக முதல் வழி மட்டுமே நடைமுறையில் செயல்படுத்துவது வழக்கம்.

இந்த முதல் வழியை மட்டுமே கடைபிடிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.  அனேகமாக தற்போது நடக்கவுள்ள குளிர்கால பாராளுமன்ற தொடரில் இந்த சட்ட வரைவு மசோதா வெளியிடப்படும் என தெரிகிறது.  இதன் மூலம் நீங்கள் உழைத்து ஈட்டிய வங்கியில் வைத்துள்ள பணம் உங்களுக்கு கிடைக்காமல் போக நேரிடலாம்.  அதாவது உங்கள் குழந்தைகளின் படிப்பு அல்லது திருமணத்துக்காக நீங்கள் வங்கியில் வைத்துள்ள தொகையை உங்கள் அனுமதி இன்றியே வங்கியின் பங்குகளாகவோ அல்லது 20 வருட வைப்புத் தொகையாகவோ மாற்ற வங்கிக்கு அதிகாரம் கிடைத்து விடும்.

அத்துடன் இந்த வங்கிகள் அனைத்தும் இன்ஷ்யூரன்ஸ் சட்டத்தின் கீழ் வருவதற்கு இந்தச் சட்டம் உதவி செய்யும்.  அப்போது நீங்கள் சேமித்து வைத்திருந்த தொகையில் ஒரு பகுதி மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.  அதாவது வங்கிச் சட்டப்படி நீங்கள் சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்யப்பட்ட ரூ.15 லட்சம் தொகைக்கு இன்ஷ்யூரன்ஸ் மூலம் ரூ. 1 லட்சம் மட்டுமே கிடைக்கும்.  இது 1961 ஆம் வருட முதலீடு இன்ஷ்யூரன்ஸ் சட்டத்தில் காணப்படுவதாகும்.  அல்லது நீங்கள் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் ரூ. 15 லட்சமும் வைப்பு நிதியாக மாற்றப்படும். வைப்பு நிதியை உடனடியாக நீங்கள் எடுக்க முடியாது.  அந்தக் காலம் முடிந்த பிறகே எடுக்க முடியும்.

வங்கிகளுக்கு தற்போது பெரிய நிறுவனங்கள் கடன் வாங்கிய தொகையை திருப்பித் தராதது பெரும் துன்பத்தை அளிக்கிறது.  அது தவிர பொருளாதார சீர்குலைவு, சரியான நிர்வாகம் இல்லாமை, ஆகியவைகளாலும் வங்கிகள் நஷ்டத்தை சந்திக்கக் கூடும்.  சாதாரணமாக வங்கிகளில் கடன் வாங்குபவர்கள் ஒன்றரை மடங்குள்ள சொத்துக்களை ஈடாக வைக்க வேண்டும்.  அதாவது ரூ. 100 கடன் வாங்க ரூ. 150 மதிப்புள்ள சொத்துக்களை ஈடாக வைக்க வேண்டும். இதுவே சட்டமாக இயற்றப்படலாம் என தெரிய வருகிறது.  இதன் மூலம் வங்கிகளுக்கு இவ்வளவு கடன் எனக் கொடுக்கப்பட்டுள்ள டார்கெட்டை அடைய சொத்து மதிப்பை உயர்த்திச் சொல்லவும், இதனால் ஊழல்கள் பெருகவும் வாய்ப்பு உள்ளது.  அப்படி இருக்க இதற்காக முதலீட்டாளர்களின் பணத்தை உபயோகிப்பது கிரிமினல் குற்றமாகும்.

பெரிய நிறுவனங்களுக்கு வங்கிகளில் கடன் அளிக்கும் போது அந்த நிறுவனங்கள் கடன் வாங்கும் தொகையைப் போல ஒன்றரை மடங்கு தொகையை முதலீடு செய்திருக்க வேண்டும் என சட்டம் இயற்றப் பட வேண்டும்.  இந்த முதலீடும் இன்ஷ்யூர் செய்யப்பட வேண்டும்.  ஆனால் 1978ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் தொகைக்கு இருந்த மதிப்பு தற்போது 13 மடங்கு உயர்ந்துள்ளது.  ஆனால் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்த வரை அது இன்னும் ரூ. 1 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.   எனவே பெரிய நிறுவனங்கள் இவ்வளவு தொகையை முதலீடு செய்வது சந்தேகத்துக்குரியது ஆகும்.

அதனால் அரசு இது போல முதலீடு மாற்றும் சட்டத்தை அனுமதிக்கக் கூடாது.  இதனால் வங்கிகளுக்கு நன்மை வருகிறதோ இல்லையோ பொதுமக்களுக்கு கடும் இடையூறாக முடியும்.  இந்த சட்டம் அமுலாக்கப்பட்டால் அது பொதுமக்களின் உரிமையைப் பறிப்பதாகும்.  ஆனால் மத்திய அரசு இந்த சட்ட மசோதாவை சமர்ப்பிப்பதில் பிடிவாதமாக உள்ளது.  இந்த சட்டம் அமுலாக்கப்பட்டால் மக்கள் பலரும், குறிப்பாக வயது முதிர்ந்தோரின் முதலீட்டுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இருக்காது.  எனவே இந்த மசோதா பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்படும் என ஒரு நம்பிக்கையுடன் காத்திருப்போம்” எனக் கூறியுள்ளார்.