சென்னை: மதுரையில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாவதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது. நேற்று (ஏப்ரல் 17) தமிழ்நாடு சட்டப்பேரவையில், கேள்வி நேரம் முடிந்ததும், சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற்றன.
சட்டப்பேரவையில் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பதில் அளித்தார். தொடர்ந்து, பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவிலில் உள்ள தமிழி கல்வெட்டு உள்ளிட்ட 12 வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்படும். தமிழ் மொழியின் தொன்மை, பண்டையகால வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகளை காலவாரியாக தொகுத்து, மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் உள்பட 10 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
10 அறிவிப்புகள் விவரம்:
1. கீழடி அருங்காட்சியகம் பொருனை அருங்காட்சியகம் தரங்கம்பாடி கோட்டை ஆகியவற்றில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி ஒளி காட்சி அமைக்கப்படும்.
2. தமிழ் மொழியின் தொன்மையையும் பண்டைய தமிழ்நாட்டு அரசியல் சமூக பொருளாதாரத்தை பறைசாற்றுகிற கல்வெட்டுகளை காலவாரியாக தொகுத்து “கல்வெட்டு அருங்காட்சியகம்” மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.
3. அண்மை காலத்தில் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் செப்பேடுகள் நாணயங்கள் ஆகிய வரலாற்றுச் சான்றுகளை வெளிக் கொணரும் வகையில் தேசிய கருத்தரங்கம் 30 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.
4. தமிழ்நாட்டு வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் வணிகக் குழு கல்வெட்டுகள் பெருவழிக் கல்வெட்டுகள் செக்கு கல்வெட்டுகள் தூம்பு கல்வெட்டுகள் நடு கற்கள் ஆகியவற்றினை மின் பதிப்பகம் செய்து நூல் வடிவிலும் இணையதளத்திலும் வெளியிடப்படும்.
5. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பண்பாட்டு மண்டலத்தின் தனித்தன்மையை பிரதிபலிக்கின்ற வகையில் “தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாறு” என்கின்ற ஒரு தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும்.
6. நிலவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியில் திணை நில வரைபடம் உருவாக்கும் திட்டம் 12 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
7. அண்மைக்கால தொல்லியல் கல்வெட்டியல் நாணயவியல் மற்றும் இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் காலனித்துவத்திற்கு முந்தைய காலம் வரையிலான வரலாற்றை பாடநூல் வடிவில் “தமிழ்நாட்டு வரலாற்று நூல்கள் வரிசை” என்ற தலைப்பில் வெளிக்கொணரப்படும்.
8. தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் ” சுவடியியல் ” என்னும் ஓராண்டு பட்டய படிப்பு 31 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
9. தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கி வரும் கல்வி பயில் உதவித்தொகை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
10. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.