சென்னை,
ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும் என்றும், அதற்காக அவரது உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற அமர்ருதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்கனவே உச்சநீதி மன்றம் இந்த வழக்கை நிராகரித்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அம்ருதா வழக்கில் ஜனவரி.25க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி பல கேள்விகளை எழுப்பி உள்ளார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா? என்றும், ஜெயலலிதாவை அம்மா என்று உரிமை கோரும் அம்ருதா, சோபன்பாபுவை அப்பா என்று உரிமை கோராதது ஏன் என்றும், அதை கூற எது தடுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜெயலலிதா மகள் என்று கோரி அம்ருதா தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு ஏற்றதா என்று பதிலளிக்கக் கோரி தலைமை செயலாளர், சென்னை காவல்துறை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் ஜனவரி.25க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.