அமிர்தசரஸ்
பொற்கோயிலில் அன்னதானத்துக்காக லங்கர் என அழைக்கப்படும் சமுதாய சமையல்கூடத்தில் வாங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பொற்கோயிலில் உள்ள சமுதாய சமையல் கூடம் மூலமாக அங்கு வரும் பக்தர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. அங்கு வாங்கப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே வாட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வாட் வரி நீக்கப்பட்டு ஜிஎஸ்டி அமுலுக்கு வந்துள்ளது.
புதிய வரி விதிப்பின் படி அங்கு வாங்கப்படும் சமையல் பொருட்களுக்கான ஜி எஸ் டி வரி வருடத்துக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும். இது தவிர சிரோபாஸ் எனப்படும் தலைப்பாகை (நம்ம ஊரு பரிவட்டம்) மரியாதைக்கு துணி வாங்க ஜி எஸ் டி செலுத்த வேண்டி வரும். வருடத்துக்கு 15 லட்சம் மீட்டர் துணி இதற்காக வாங்கபடுகிறது.
பொற்கோயிலில் வழங்கப்படும் உணவு, மற்றும் சிரோபா மரியாதை ஆகியவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை அனைத்தும் பக்தர்களின் நன்கொடையில் இருந்தே செலவு செய்யப்படுகிறது, இதனால் பொற்கோயிலை நிர்வகித்து வரும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி இது குறித்து நிதி அமைச்சருக்கும், ஜி எஸ் டி கவுன்சிலுக்கும் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு வரிவிலக்கு தேவை என கோரிக்கை விடுத்துள்ளது