சென்னை
வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் அ ம மு க போட்டியிடாது என டி டி வி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக மூன்றாக உடைந்து தினகரன் அணி, ஒபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என ஆகியது. இதில் இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் அணி இணைந்ததால் தினகரன் அணி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்னும் தனிக் கட்சியை தொடங்கியது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அ ம மு க தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் ஏராளமான பணம் கைமாறியதாக கிடைத்த தகவல் மற்றும் சோதனையின் அடிப்படையில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அந்த தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் அ ம மு க போட்டியிடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் இது குறித்து, “வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் அ ம மு க போட்டியிட போவதில்லை. தற்போது அமமுக வுக்கு என நிலையான சின்னம் இல்லாத நிலை உள்ளது. எனவே நிலையான சின்னம் கிடைத்த உடன் களம் இறங்குவோம்” என தெரிவித்துள்ளார்.