புதுடெல்லி: தினகரனின் அமமுக -விற்கு குக்கர் சின்னத்தை ஒதக்க முடியாது என விளக்கி, உச்சநீதிமன்றத்தில் 300 பக்க பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதனையடுத்து நாளை தனது தீர்ப்பை அளிக்கவுள்ளது உச்சநீதிமன்றம்.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளைதான் கடைசி நாள். குக்கர் சின்னத்தை தங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்காததால், உச்சநீதிமன்றத்தில் அமமுக சார்பாக அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது உச்சநீதிமன்றம். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் எனும் நிலையில், இன்று மாலை 300 பக்க அளவிலான பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
அமமுக ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லை என்பதால், பொதுப் பட்டியலில் உள்ள குக்கர் சின்னத்தை அதற்கு ஒதுக்க முடியாது என்பது உள்ளிட்ட பல விபரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. சின்னம் பிரச்சினையால், அமமுக வேட்பாளர்கள் யாரும் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ளனர்.
இந்த நிலையில், அமமுக தொடர்பாக மிக முக்கியமான பிரச்சினையில், உச்சநீதிமன்றம் நாளை என்ன தீர்ப்பு வழங்கும் என்ற பரபரப்பு கூடியுள்ளது.
– மதுரை மாயாண்டி