சென்னை: ரயில் நிலையங்களில் ஒரு லிட்டர் தண்ணீரை ஐந்து ரூபாய்க்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து, தமிழக அரசின் “அம்மா” குடிநீர், விலை குறைக்கப்படும் என்று செய்தி பரவி உள்ளது.
தனியார் நிறுவனங்கள் பாட்டில் குடிநீரை குறைந்த பட்சம் லிட்டருக்கு ரூ. 20க்கு குறையாமல் விற்பனை செய்கின்றன. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் ஒரு லிட்டர் குடி நீர் பாட்டில் ஐந்த ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது. “அம்மா குடிநீர்” என்ற பெயரில் அரசு போக்குவரத்து நிலையங்களில் இந்த பாட்டில் நீர் கிடைக்கிறது.
இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் ரூ.5க்கு ஒரு லிட்டர் தண்ணீர் விற்பனை செய்ய திட்டமிட்டது (ஏற்கெனவே லிட்டர் ரூ. 15க்கு ரயில்வே நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது.) மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய தண்ணீர் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை, அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களில் 7000 தண்ணீர் இயந்திரங்களை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசின் “அம்மா குடிநீரின்” விலையை பத்து ரூபாயில் இருந்து ஐந்து ரூபாயாக குறைக்க அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.