சென்னை:
சென்னையில் செனாய் நகர், திநகர் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பொழுது போக்கிற்காக அம்மா திரையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் குறைந்த செலவில் திரைப்படங்கள் பார்க்க தியேட்டர் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி சென்னையில் இரண்டு தியேட்டர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வரும் உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக அரசு மக்கள் நல திட்டங்கள் பலவற்றை செயல்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. அம்மா வைபை, அம்மா தியேட்டர், பால் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகள் தேர்லுக்கு முன்பே செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
சென்னை மாநகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக கலையரங்குகள் உள்ளன. அதை தியேட்டராக மாற்ற முடிவு செய்து, தற்போது திநகரிலும், செனாய் நகரிலும் உள்ள கலையரங்குகள் தியேட்டர்களாக உருமாறி வருகிறது.
ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 3000 பேர் அமரக்கூடிய குளுகுளு கலையரங்கம் குளுகுளு தியேட்டராக மாற்றப்பட்டு வருகிறது. தியாகராய நகரில் உள்ள தியாகராய அரங்கமும் தியேட்டராக மாற்றப்பட்டு வருகிறது.
அம்மா திரையரங்கத்தில் டிக்கெட்டின் விலை மிகக்குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. ரூ.10, ரூ.20, ரூ.30 அளவில் கட்டணம் இறுதி செய்யப்படலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்