சென்னை: பம்மல் அம்மா உணவகத்தின் மேற்கூரை பால் சீலிங்  உடைந்து, அங்கு பணியாற்றி வரும் பெண் மீது விழுந்தது. இதனால் அந்த பெண் காயம் அடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்மா உணவகத்தை  சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அதை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கி உத்தர விட்டிருந்த நிலையில், பராமரிப்பு இல்லாத காரணத்தால், அம்மா உணவகத்தின் மேற்கூரை பால் சிலிங் உடைந்து விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளார்.

சென்னையில் வசிக்கும் அடித்தட்டு மற்றும் ஏழை  மக்களின் பசியை போக்கி வந்தது  அம்மா உணவகம்.  இது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், அதை திமுக அரசு முறையாக செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டப்படவில்லை. ஆனால், முதலமைச்சர் அதற்கான நிதி ஒதுக்கி, முறையாக செயல்படும் என அறிவித்தாலும், பல அம்மா உணவகங்கள்  பராமரிப்பின்றியும்,  தேவையான அளவுக்கு முறையாக  உணவு வழங்கப்படாததாலும், அதன்மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது.

இந்த நிலையில்,  தாம்பரம் மாநகராட்சி சார்பில் பம்மலில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில்  இன்று காலை, பால் சீலிங் திடீரென உடைந்து  கீழே விழுந்ததால் அங்கு பணி புரிந்தபெண் படுகாயம் அடைந்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மா உணவகத்தில் ஊழியர்கள்  உணவுகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஒருவர் மட்டும் உணவகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென  அம்மா உணவகத்தில் மேல் கூரை பால் சீலிங் திடீரென பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது. இதில் அங்கு துப்புரவு பணியை மேற்கொண்டு இருந்த உமா (வயது 46) படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து தகவல் அறிந்ததும், விரைந்து  மாநகராட்சி அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து  கூறய பம்மல் தொகுதி அதிமுக  முன்னாள் எம்எல்ஏ தன்சிங், “அம்மா உணவகங்களை திமுக அரசு முடக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை. தற்போது அனைத்து அம்மா உணவகங்களும் மிகவும் பாழடைந்த கட்டிடம் போல் உள்ளது. உணவும் சரிவர தயாரிக்கப்படுவதில்லை தரமாகவும் இல்லை. அதிமுக ஆட்சியில் சிறப்பாக பராமரிக்கப்பட்டதால் ஏராளமானவர்கள் பயன் பெற்று வந்தனர். அம்மா உணவகத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு செயல்படுகிறது. விரைவில் அம்மா உணவகத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்.

அம்மா உணவகங்களுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு! நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு…