கொல்கத்தா
அமித்ஷாவுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் அரசியல் தெரியவில்லை என திருணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி கூறி உள்ளார்.
இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு கட்சி தாவல் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. அம்மாநில ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என 10 பேர் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது குறித்து, “மேற்கு வங்கத்தில் தற்போது நடப்பது ஒரு தொடக்கம் தான். மேற்கு வங்கத்தில்,விரைவில் ஒஎஉ அரசியல் சுனாமி வீசப் போகிறது. வரும் ஆண்டு, சட்டசபைக்குத் தேர்தல் நடப்பதற்கு முன், திருணாமுல்லில், மம்தா பானர்ஜி மட்டுமே இருப்பார். மம்தா பானர்ஜி அவர்களே இதற்கு முன் எந்தக் கட்சியில் இருந்தீர்கள். காங்கிரசில் இருந்து வெளியே வந்து தானே, இந்தக் கட்சியைத் துவக்கினீர்கள்,” எனக் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா பேசியதற்கு திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி, “மேற்கு வங்க அரசியல் வரலாறு முழுவதுமாக அமித் ஷாவுக்கு தெரியாது. அதை அவர் புரிந்து கொள்ளவும் இல்லை.மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வந்த பிறகு எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அவர் தொடங்கியதுதான் திருணாமுல் காங்கிரஸ் கட்சி. எதற்காகத் தனிமனிதர் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? ஏன் அவர்களை அவமானப்படுத்துகிறீர்கள்.?
எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக வர வேண்டும் என்ற பேராசை பிடித்தவர் அல்ல, அவருக்கு மக்கள் வாக்களித்து முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். நீங்கள் விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டவுடன் விவசாயிகளின் நண்பராகவிட முடியாது. உண்மையாக விவசாயிகளுக்காக உழைப்பவர்கள்தான்அவர்களுக்கு நண்பராக இருக்க முடியும்.. மீண்டும் மம்தா பானர்ஜி 3வது முறையாக ஆட்சிக்கு வருவார். மேற்கு வங்க மக்கள், மம்தா மீது உள்ளார்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.