டில்லி
பாரடைஸ் பேப்பர்ஸ் என்னும் தகவலின்படி இந்தியாவில் உள்ள பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளது அம்பலம் ஆகி உள்ளது.
“பாரடைஸ் பேப்பர்ஸ்” என்பது 1,34,00,000 ஆவணங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஆகும். ஜெர்மனியின் செய்தித்தாள் ஒன்று இந்த புலனாய்வைத் தொடங்கியது. பிறகு அகில உலகிலும் உள்ள 96 செய்தி நிறுவனங்களும் இணைந்து இந்த புலனாய்வை நடத்தி உள்ளன. இதில் இந்திய செய்தித் தாளான இந்தியன் எக்ஸ்பிரசும் பங்கேற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புலனாய்வின் படி வெளிநாடுகளில் உள்ள வரிச் சலுகையை பயன்படுத்தி உலகச் செல்வந்தர்கள் பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
மொத்தம் 714 இந்தியர்களின் பெயர்கள் இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் தகவலில் வெளியாகி உள்ளது. மொத்தம் வெளியாகி உள்ள 180 நாட்டிலுள்ளோர் பட்டியலில் இந்தியா 19ஆம் இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இந்தியர்களில் அமிதாப் பச்சன், விஜய் மல்லையா, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜயந்த் சின்ஹா ஆகியோரின் பெயர்களும் உள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன், கார்த்தி சிதம்பரம், சச்சின் பைலட் ஆகிய அரசியல்வாதிகளின் பெயர்களும் இந்த தகவலில் உள்ளன. இது தவிர பிரபல பாலிவுட் நடிகரும் சர்ச்சைக்குரியவருமான சஞ்சய் தத்தின் மனைவி மன்யாதா தத், ஒரு ஊழல் வழக்கில் இடைத்தரகரகராக செயல் பட்டதாகக் கூறப்படும் நீரா ராடியா, ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
இந்தத் தகவல்களை பாரடைஸ் பேப்பர்ஸின் இந்தியப் பங்காளரான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. அந்த செய்தித்தாளின் தகவலின் படி இதில் பல இந்திய முன்னணி நிறுவனங்களும் சம்பந்தப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜிந்தால் ஸ்டீல், அப்போலோ டயர்ஸ், ஹாவெல்ஸ், ஹிந்துஜாஸ், எம்மார் எம் ஆர் எஃப், வீடியோகோன், ஹிரானந்தானி குழுமம், மற்றும் டி எஸ் கன்ஸ்டிரன்கஷன்ஸ் போன்ற புகழ்பெற்ற இந்திய நிறுவனங்களும் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளன என கூறப்படுகிறது.
இந்திய அரசு கறுப்புப் பண எதிர்ப்பு தினமாக வரும் எட்டாம் தேதியை அனுசரிக்க உள்ள நிலையில் இந்த தகவல்கள் இரண்டு நாட்கள் முன்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது என பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.