லக்னோ:

போர் பதற்றம் நிலவும் சூழலில், விமானப் படை தாக்குதலை சொல்லி, உத்திரப் பிரதேசத்தில் பாஜக தலைவர் அமீத்ஷா மோடிக்கு ஆதரவு தேடிக் கொண்டிருக்கிறார்.


புல்வாமா தாக்குதலை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தக் கூடாது என எதிர்கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால் பாஜவினர் அதை பொருட்படுத்தாமல் அதனை வாக்கு அரசியலுக்கு பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாத முகாமை அழித்த அன்று, கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமீத்ஷா, இதற்காக பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

யார் தீவிரவாதத்தை ஒழித்தது? யார் பாகிஸ்தானுக்கு நெத்தியடி பதில் கொடுத்தது? என காஜிப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கேள்வி எழுப்பிய அமீத்ஷா, இனி இந்தியாவை தாக்கும் முன் ஒரு தடவைக்கு பத்து தடவை பாகிஸ்தான் யோசிக்கும் என்றார்.

இந்திய விமானப் படையை பாராட்டிய அமீத்ஷா, தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் பிரதமரின் திறமையையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. அங்கு பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய லோக் தள் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுவதால், பாஜகவின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

இதனை சமாளிக்க விமானப் படைத் தாக்குதலை பாஜகவினர் கையில் எடுத்துள்ளனர் என்கின்றன எதிர்கட்சிகள்.