டெல்லி:

பாஜக தலைவர் அமித்ஷா தனது மகன் ஜெய்ஷா மீதான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்து முதல் முறையாக பேட்டியளித்துள்ளார்.

‘திவயர்’ என்னும் இணையதளம் வெளியிட்ட ஆய்வு கட்டுரையில், பா ஜ க தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வந்த டெம்பிள் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, 16000 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது.  இந்த கட்டுரை வெளிவந்ததில் இருந்து அரசியலில் கடும் புயல் வீசி வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.  அமித்ஷா தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், உரிய விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் காங்கிரஸ் கோரியது.

இதுவரை மவுனமாக இருந்த அமித்ஷா இன்று டிவி சேனல் ஒன்றிடம் தனது மவுனத்தைக் கலைத்துள்ளார். அவர், “ஜெய் ஷாவை குற்றம் சொல்பவர்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அதை நீதிமன்றம் கொண்டு செல்லட்டும்.  எனது மகன் செய்துவந்த தொழிலில் ஊழல் எப்போதுமே நடைபெறவில்லை. அவர் செய்து வந்தது கமாடிட்டி வர்த்தகம் ஆகும். அந்த வர்த்தகம் அதிக மதிப்பு மற்றும் குறைந்த லாபம் கொண்டதாகும்.  அவரது வர்த்தகத்தில் அனைத்து பண பரிவர்த்தனைகளும் காசோலைகள் மூலம்தான் மேற்கொள்ளப்பட்டது.  அதனால் நிதி முறைகேடுக்கு வாய்ப்பே இல்லை.

அந்த நிறுவனம் எந்த ஒரு செக்யூரிட்டியும் இல்லாமலேயே கடன் பெற்றதாக கூறப்படுவதில் சிறிதும் உண்மையில்லை. அது வழக்கமான வர்த்தகக் கடன்தான்.  ஒரு வர்த்தகம் ரூ.1 கோடிக்கு நடந்தால், லாபமும் ரூ.1 கோடி கிடைக்கும் என்பது உண்மையாக இருக்க முடியுமா? 16000 மடங்கு லாபம் உயர்ந்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது.

ஜெய்ஷாவின்  நிறுவனம் ரூ.80 கோடி வரை லாபம் ஈட்டியபிறகு, ரூ.1.5 கோடி வரை நஷ்டத்தை சந்தித்ததையொட்டி அந்த நிறுவனம் மூடப்பட்டது. மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி அமைப்பிடம் ஜெய்ஷாவின் நிறுவனம் கடன் பெற்றதை எந்த விதத்திலும் குற்றமாக கருத முடியாது. கடனில் அவருக்கு சலுகைகள் எதுவும் அளிக்கவில்லை. அவரது நிறுவனம், மற்ற நிறுவனங்களைப் போல் வர்த்தக வட்டி விகிதத்தில்தான் கடன் பெற்றுள்ளது” என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்..