கிருஷ்ணா நகர், மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஒரு தேர்தல் பேரணியில் கலந்துக் கொண்ட அமித்ஷா இந்திய விமானப்படையை மோடியின் விமானப்படை என குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் பிரசாரத்தில் ராணுவ நடவடிக்கைகள், சீருடைகள் மற்றும் ராணுவத்தினரின் புகைப்படங்கள் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆயினும் பாஜகவினர் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை தங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஒரு சில தினங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்திய ராணுவத்தை மோடியின் படை என குறிப்பிட்டார். அது மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகரில் நேற்று ஒரு பேரணியில் பேசியது அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அமித்ஷா அந்த பேரணியில், “புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதர்கு முன்பு இது போல நடந்தால் பதில் நடவடிக்கை எடுக்கும் வழக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் அந்த தாக்குதல் நடந்த 13 ஆம் நாள்  மோடி ’தனது விமானப்படையை’ அனுப்பி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் திவிரவாதிகளை தூள் தூளாக சிதற அடித்தார்.

இந்த தாக்குதல் நடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் மம்தா அக்காவின் முகத்தில் உள்ள களை மறைந்து விட்டது. மம்தா அக்காவும் ராகுல்ஜியும் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த சொல்கின்றனர். உங்களுக்கு அவர்களுடன் இலு இலு (ஐ லவ் யு வின் சுருக்கம்) என விளையாட ஆசையாக இருந்தால் நீங்கள் விளையாடுங்கள். இது பாஜக அரசு. நாங்கள் விளையாட மட்டோம்.” என கூறினார்.

ஒரு பழைய இந்தி திரைப்படத்தில் ஐ லவ் யு என்பதை கதாநாயகன் விவேக் ராஸ்தான் மற்றும் கதாநாயகி மனிஷா கொய்ராலா ஆகியோர் இலு என சொல்வது வழக்கமாகும். அதை அமித்ஷா கூறி உள்ளார்.