பனாஜி: கோவா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அமித் பலேகர்-ஐ அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இணைந்த வழக்கறிஞர் அமித் பால்கர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது இதன் காரணமாக, அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக போராடி வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணி கட்சிளும், ஆம்ஆத்மி கட்சியும் களத்தில் குதித்துள்ளன.
கோவாவில் உள்ள 40 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த நிலையில், இன்று ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் கோவா மாநிலத்தில் இலவச குடிநீர், மின்சாரம் வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், இன்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கோவா மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக அமித் பலேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.