டெல்லி:  கடந்த 2008-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சித்தலைவர்கள்  சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விசாரிக்கக் உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம் மாநில உயர்நீதி மன்றத்தை நாட அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு புகைப்படம்  படம் சமூக ஊடகங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைரலாகியது.

இதுகுறித்து, மூத்த வழக்கறிஞரும் பா.ஜ.க தலைவருமான மகேஷ் ஜெத்மலானி, இந்த ஒப்பந்தம் குறித்து  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் என்ஐஏ (NIA)  விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும், சீனாவில் ஆளும் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை என்ஐஏ (NIA)  கைப்பற்ற வேண்டும் என்றும்,

அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் தற்போதைய சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பிற்கு மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், கடுமையான UAPA சட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் குறித்து NIA விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பெய்ஜிங்கில் இரு தரப்பினருக்கும் இடையே உயர் மட்டத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் அவர்களுக்கிடையில் ஒத்துழைப்பதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இரு கட்சிகளுக்கும் “முக்கியமான இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து ஒருவருக்கொருவர் ஆலோசிக்க வாய்ப்பு” வழங்கியது.

அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி தலைமையில்  இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ( UPA)  ஆட்சி நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது,  தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக சோனியா காந்தி இருந்தார்.

அதன் காரணமாக, இந்த இந்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் CPC-யின் சர்வதேச துறை அமைச்சர் வாங் ஜியா ரூய் ஆகியோர் சோனியா காந்தி மற்றும் அப்போதைய சீன துணை அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

இந்த விவகாரம்,  சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் மாநிலம் லடாக்கில் LAC-யில் கால்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பின்னர் முக்கியத்துவம் பெற்றது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமைநீதிபதி தலைமையிலான அமர்வு, இதுகுறித்து  உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தி வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது.