கொரோனா பரவலுக்கு மத்தியில் வெளிநாட்டில் முழுமையாக நடந்து முடிந்தது, அக்ஷய் குமாரின், புதிய படம்
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு , சினிமா படப்பிடிப்புக்கு, அரசாங்கம், அனுமதி வழங்கியுள்ள நிலையில், கோடம்பாக்கத்தில் உச்சநடிகர்கள் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை.
ஆனால் அக்ஷய்குமார், தனது புதிய படத்தின் படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்தி முடித்துள்ளார்.
இது குறித்த சில தகவல்கள்:
அக்ஷய்குமார் நடிக்கும் புதிய இந்தி சினிமா- ’’பெல்பாட்டம்’’.
ரஞ்சித் திவாரி இயக்குகிறார்.
200 பயணிகளுடன் கடத்தப்பட்ட விமானத்தை ‘’ரா’’ உளவு அதிகாரி, உயிரைப் பணயம் வைத்து மீட்பது தான், இதன் கதை.
1980களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இந்த படத்தில் ‘’ரா’’ ஏஜெண்டாக நடிக்கிறார், அக்ஷய்.
இந்த படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்புக்காக ,கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்காட்லாந்து நாட்டுக்கு , அக்ஷய்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானத்தில் பறந்து சென்றனர்.
அங்கு, படப்பிடிப்பு குழுவினர், 14 நாள் தனிமைப்படுத்திக்கொண்ட பின், ஷுட்டிங்கில் கலந்து கொண்டனர்.அக்ஷய்குமார், 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதில்லை.
வெளிநாட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதால், தயாரிப்பாளருக்கு 14 நாட்கள் வீணான நிலையில், தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, இரண்டு ‘’ஷிப்ட்’ கள் நடித்துக் கொடுத்துள்ளார், அக்ஷய்குமார்.
முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதால்,படக்குழு இந்தியா திரும்புகிறது.
கொரோனாவுக்கு பின், ஆரம்பித்து, ஒரே மூச்சில் முடிவடைந்த முதல் படம் இது தான்.
ஸ்காட்லாந்தில் இருந்து, தனி விமானத்தில் இந்தியா கிளம்பும் முன்னர், விமானம் அருகே நின்றபடி எடுத்த போட்டோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அக்ஷய்குமார்,’’ படப்பிடிப்பு வெற்றி கரமாக நடந்து முடிந்து விட்டது. நீண்ட நாள் படப்பிடிப்பு என்றாலும் பிரயோஜனமாக இருந்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
-பா.பாரதி.