கொரோனாவை மறந்துவிட்டு விருந்து கும்மாளம்..   அதிகாரிகள் மீது குவியும் சரமாரி புகார்

இராஜபாளையம் நகராட்சியில் நில அளவு பிரிவில் பணிபுரியக்கூடிய இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதனை அடுத்து நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.  இந்த நிலையில் இராஜபாளையம் ஆறாவது மைல் நீர்த்தேக்கத்தில் இராஜபாளையம் நகருக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பகுதியில் நேற்று நகராட்சி ஆணையர் சுந்தரம்பாள் தலைமையில் நகராட்சி இன்ஜினியர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் கிடா வெட்டி கறி விருந்து அளித்துள்ளார்.

இராஜபாளையம் நகராட்சியில் அதிகாரிகள் பலர் இதே அலுவலகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதால் தான் இப்படி அலட்சியமாகச் செயல்படுகின்றனர்.  இது மனவேதனை அளிக்கும் செயலாக உள்ளது எனவும் பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள், “நகராட்சி அதிகாரிகள் நகர் பகுதியில் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வுக்குச் செல்வதில்லை. ஆனால் இது போன்ற சம்பவங்களில் மொத்தமாகக் கலந்து கொண்டு கும்மாளம் அடிக்கின்றனர்.  இவையெல்லாம்  உயர் அதிகாரிகள் கவனத்துக்குச் செல்லாதா? மாவட்ட ஆட்சியர் உடனடியாக நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கொரோனா தொற்று தீவிரமாக உள்ள நிலையில் கிடாவிருந்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தான் மிகப்பெரிய கேள்வி.
– லெட்சுமி பிரியா