பெங்களூரு: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க சொந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்றுள்ளனர் சகோதரர்கள்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஏழை எளிய மக்களும் தினக் கூலிகளும் எவ்வித வாழ்வாதாரமும் தினசரி உணவும் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.
சேவை மனப்பான்மை கொண்ட சிலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் மிகவும் ஆச்சர்யம் அளிக்கக்கூடிய வகையில், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த 2 சகோதரர்கள் தங்கள் நிலத்தை விற்று ஏழைகளுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
தாஜம்முல் பாஷா மற்றும் முஷம்மில் பாஷா என்பவர்கள் தான் அந்த சகோதரர்கள். கோலார் நகரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான 25 லட்சம் ரூபாய் மதிப்புக் கொண்ட நிலத்தை நண்பருக்கு விற்று ஏழைகளுக்கு உணவளித்துள்ளனர்.
இதுகுறித்து தாஜம்முல் பாஷா கூறி இருப்பதாவது: கொரனா பாதிப்பில் இருந்து தப்பிக்க ஊரடங்கு மிக முக்கியம். ஆனாலும் தினசரி உணவுகூட கிடைக்காத ஏழை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டியுள்ளது. எனவே அவர்களது வீட்டு வாசலுக்கே சென்று மளிகை பொருட்களை வழங்குவதே அவர்களை காக்க சிறந்த வழியாகும்.
சிறு வயதிலேயே எங்கள் பெற்றோரை இழந்து கோலாரில் பாட்டி வீட்டிற்கு வந்தோம். உணவிற்கு வருந்தியபோது சீக்கியர், முஸ்லீம், இந்து என அனைத்து மதத்தவரும் எங்களுக்கு உணவு தந்தனர். அந்த மனித நேயத்தின் அடிப்படையில் நாங்கள் இதனை செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.
சகோதரர்கள் இருவரும் முதல் வேலையாக வீட்டிற்கு அருகில் டெண்ட் அமைத்து மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி அதில் சேமித்துள்ளனர். மேலும், வீடு இல்லாதவர்கள் மற்றும் வீட்டில் சமைக்க இயலாதவர்களுக்கு உணவு வழங்கும் வண்ணம் சமையல் அறையும் அமைத்துள்ளனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் 10 கிலோ அரிசி, 1 கிலோ மாவு உள்ளிட்ட பொருட்கள், 2 கிலோ கோதுமை, 1 கிலோ சர்க்கரை மற்றும் தேவையான அளவு எண்ணெய், தேயிலை, சானிடைசர்கள், முகக்கவசம் ஆகிய பொருட்களையும் வழங்கியுள்ளனர். 12000க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட 2800க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். 2,000 மக்களுக்கு தினசரி உணவு அளிக்கின்றனர்.