டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்ட விவசாயிகள் பேரணி தொடங்கி உள்ளது.  இதன் காரணமாக அங்கு பதற்றம்  ஏற்பட்டுள்ளது.

மோடி அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும்,  முடிவு எட்டப்படாத நிலையில், 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

3 வழியாக டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீசார் அனுமதி கொடுத்தனர். மற்ற இடங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,   மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர்.  அதையடுத்து,  டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்வு முடிவடைந்ததும் விவசாயிகளின் பேரணி தொடங்கியது.

அதனப்டி, முதல்கட்டமாக  சிங்கு எல்லையில் பேரணியை விவசாயகிள் தொடங்கினர். டெல்லி – ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியில் சென்று வருகின்றனர்.

ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கும் பேரணி கன்ஜாவாலா, பவானா, அவுசான்டி எல்லை , கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும்.

அதுபோல,  திக்ரி எல்லையில் இருந்து தொடங்கியுள்ள பேரணி நாக்லோ, நஜாப்கர், மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் திக்ரியை  வந்தடைகிறது.

மூன்றாவதாக டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி, காஜியாபாத், பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும். சுமார் 100 கிலோ மீட்டருக்கு நடைபெறும் இந்த பேரணி மாலை ஆறு மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளின் பேரணியின்போது, சில இடங்களில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால், அங்கு விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  டெல்லி- அரியானா எல்லையான சிங்குவில் சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அப்புறப்படுத்திவிட்டு  டெல்லியை நோக்கி ஏராளமான விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடங்கினர். இதனால் பதற்றம் நிலவி வருகிறது.