வாஷிங்டன்:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்வதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (வயது 55) கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால்,உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவரின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் குணமடைவதற் காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றார்.
மேலும் அவருக்கு உதவும் பொருட்டு, இரண்டு அமெரிக்க முன்னணி மருந்து நிறுவனங்களிடம் இங்கிலாந்து அரசை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும், போரிஸ் ஜான்சனுக்கு சிகிச்சை அளித்து வருகிற டாக்டர்களை தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் கூறியுள்ளார்.