இந்தியாவின் புதிய மின்சார வாகன (EV) கொள்கையானது, EVகளுக்கான உற்பத்தி மையமாக நாட்டை மேம்படுத்துவதையும், உலகளாவிய உற்பத்தியாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு இந்திய சந்தையை அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு மீண்டும் குறிவைக்கிறது.
1990ம் ஆண்டு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் 1995ம் ஆண்டு இந்தியாவில் தனது முதல் உற்பத்தியை துவங்கியது.
சென்னையை அடுத்த மறைமலைநகர் மற்றும் குஜராத் மாநிலத்தின் சனன்த் ஆகிய இடத்தில் தொழிற்சாலையை அமைத்து செயல்பட்டு வந்த ஃபோர்டு சுமார் 30 ஆண்டுகள் இந்திய சந்தையில் கார் விற்பனையில் முக்கிய பங்குவகித்தது.
2021ம் ஆண்டு இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை இழுத்து மூடிய அந்நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் நுழைய கடந்த ஓராண்டாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW நிறுவனத்துடன் சேர்ந்து இதற்கான பணிகளில் இறங்கியுள்ள ஃபோர்டு நிறுவனம் தற்போதுள்ள சூழலுக்கு ஏற்பட்ட மின்சார கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதன் கார்கள் பரிச்சயமான ஒன்று என்பதால் தங்கள் புதிய முயற்சி அதற்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மூடப்பட்ட அந்நிறுவனத்தின் தொழிற்சாலையை மீண்டும் திறப்பது குறித்தும் அதில் உள்ள சட்ட நடவடிக்கை குறித்தும் அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் சென்னையைத் தவிர வேறு இடங்களில் தொழிற்சாலை அமைக்கும் வாய்ப்பு குறித்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.
இந்த ஆலோசனைகளை ஃபோர்டு நிறுவனத்தின் அமெரிக்க தலையகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கார் தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஃபோர்டு நிறுவனம் முடிவு…