சியோல்:
தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா விமானப்படை கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் 230 விமானங்கள் பங்கேற்றுள்ளன.
சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. கண்டம்விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை கடந்த வாரமும் நடத்தியது. இந்த ஏவுகணை தென்கொரிய வான் எல்லையில் பறந்து ஜப்பான் கடற்பகுதியில் விழுந்தது.
இதையடுத்து அமெரிக்காவின் எந்த பகுதியையும் தங்களால் தாக்கமுடியும் என வடகொரியா அறிவித்தது. இது கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்படி அமெரிக்கா மற்றும் தென்கொரியா விமானப்படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 230 ராணுவ விமானங்கள் பங்கேற்றுள்ளன. 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.