அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் சிறையில் இருந்து 10 கைதிகள் வெள்ளியன்று இரவு தப்பியோடி உள்ளனர்.

சிறையில் உள்ள கழிவறையை உடைத்து அதன் பின்னால் இருந்த பைப்புகளை அகற்றி துளை மூலம் வெளியேறியது தெரியவந்தது.

வெள்ளியன்று நள்ளிரவு 12:20 மணிக்கு சிறையில் இருந்து தப்பிய அவர்கள் பின்னர் சிறைச்சாலை சுவர் ஏறி குதித்து இரவு 1 மணி அளவில் நெடுஞ்சாலையை கடந்து தப்பியுள்ளனர்.

வழக்கமாக காலை 8:30 மணிக்கு கைதிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் போது 10 பேர் தப்பியோடியது தெரியவந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறையில் அப்போது காவலுக்கு இருந்த ஒரே அதிகாரியும் சாப்பிட சென்ற நேரத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.

மேலும், சிறை அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் இந்த சம்பவம் அரங்கேற வாய்ப்பில்லை என்று கூறப்படுவதை அடுத்து மூன்று சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு பயங்கர குற்றங்களில் ஈடுபட்ட இந்த 10 பேரும் ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதை அடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தப்பிச் சென்ற குற்றவாளிகளில் மூன்று பேர் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எஞ்சியுள்ள 7 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.