டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த 200க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை இறுதிச் சடங்குக்கு கொண்டு சென்று சேவை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொரோனாவால் உயிரிழந்தார்.
தலைநகர் டெல்லியில், 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்களை எடுத்துச் சென்று சேவையாற்றியவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆரிப் கான். சீலாம்புர் பகுதியை சேர்ந்தவர்.
அவசரகால சேவை அளிக்கும் ஷஹீத் பகத் சிங் சேவா தளம் என்ற அமைப்பில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்தவர்.48 வயதான அவர், வீட்டில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தால், 6 மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே தங்கியுள்ளார்.
இந் நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆரிப்கான் கொரோனாவால் உயிரிழந்தார். 200க்கும் மேற்பட்ட உடல்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்த அவருக்கு கடந்த 3ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.
அதன் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து அவரது மகன் ஆடில் கூறியதாவது: அவர் துணிகளைப் போல ஏதாவது ஒன்றை எடுக்க வீட்டுக்கு வந்தபோது நாங்கள் சந்தித்தோம்.
சில சமயங்களில் அவரை பார்க்க நான் செல்வேன். நாங்கள் எப்போதுமே அவரை பற்றி கவலைப்பட்டு கொண்டே இருப்போம். ஆனால் அவர் ஒருபோதும் கோவிட் பற்றி கவலைப்படவில்லை, அவர் தனது வேலையை சிறப்பாக செய்ய விரும்பினார் என்றார்.
மாதத்திற்கு ரூ .16,000 சம்பாதித்த ஆரிப்கான், அந்த குடும்பத்தில் வருமானம் ஈட்டியவர். அவர்களின் வீட்டு வாடகை ரூ .9,000. அவர்களுக்கு சகோதரர்களுக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை.