அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது அவரது விடாமுயற்சியால் இந்த நாட்டின் அரசியலையே மாற்றினார் என்று ராகுல் காந்தி கூறினார்.

ரேபரேலி தொகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அந்த தொகுதி எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் இன்று கலந்துரையாடினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி “அரசியலமைப்பு உருவாக்கத்தில் தலித்துகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.” “ஆனால் இன்று எல்லா இடங்களிலும் உங்களை மிதிக்கும் ஒரு அமைப்பு உள்ளது” என்று கூறினார்.

மேலும், “நாட்டின் சிறந்த 500 நிறுவனங்களின் உயர் பதவிகளில் தலித்துகள் எவ்வளவு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும்,” என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஒரு மாணவர், “எங்களுக்கு சரியான வசதிகள் இல்லாததால் அந்த நிலையை அடைய முடியவில்லை” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த ராகுல், “டாக்டர். அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட போதும் அவர் தனது விடாமுயற்சியால் தனித்துவம் பெற்றதுடன் இந்த நாட்டின் அரசியலையே உலுக்கினார்” என்று தெரிவித்தார்.

“முழு அமைப்பும் உங்களுக்கு எதிரானது.” இந்த அமைப்புக்கு உங்கள் வளர்ச்சி தேவையில்லை. இந்த அமைப்பு ஒவ்வொரு நாளும் உங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. “அந்தத் தாக்குதல் உங்களுக்கு எப்படி நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு நீண்ட நேரம் ஆகலாம்” என்று ராகுல் கூறினார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடு உங்கள் கோட்பாடு என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.” இந்த நாட்டில் தலித்துகள் இல்லை என்றால், இவ்வளவு வலுவான அரசியலமைப்புச் சட்டம் சாத்தியமில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

எனவே இது உங்கள் சித்தாந்தம், உங்கள் அரசியலமைப்பு. “இதையெல்லாம் மீறி, உங்களை தொடர்ந்து ஒடுக்கும் ஒரு அமைப்பு இருப்பது முரண்பாடாக இருக்கிறது,” என்று அவர் கவலை தெரிவித்தார்.