டெல்லி: அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி தரப்பில் தர்ணா போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாகக் கூறி பாஜக எம்பிக்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதித்ததாக இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற விவாதத்தின்போது நாடாளுமன்ற மேலவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரை கடுமையாக சாடினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், அமித் ஷா, மோடி மற்றும் ஒட்டுமொத்த பாஜகவும் பாபா சாகேப் அம்பேத்கரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து நேற்று (டிசம்பர் 18ந்தேதி) நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்பிக்கள் கைகளில் பதாதைகளுடன் போராட்டம் நடத்தினர். பின்னர் இரு அவைகளிலும் அமளி செய்து அவை முடக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 11மணி அளவில்அவை கூடுவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாக ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமித் ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வளாகத்திற்குள்ளேயே பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டி.ஆர். பாலு, சஞ்சய் ரெளத், திருமாவளவன் உள்ளிட்ட எம்பிக்கள் நீல நிற ஆடை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டு அமித்ஷாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித் ஷா விலக வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எம்பிக்கள் முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து,. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாகக் கூறி பாஜக எம்பிக்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் போராட்டத்துக்கு எதிராக கையில் பதாதைகளுடன் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.பாராளுமன்ற வளாகத்தில் பாஜக ஆதரவு எம்.பி.க்கள் எதிர்க்கட்சியரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.
Photo and Videos: Thanks ANI