ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்த்து, நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா, கருத்துகளை வெளியிட்டதாக பலமுறை சர்ச்சை எழுந்திருக்கிறது. அப்போது அவர் அது குறித்து பெரிதாக கண்டுகொண்டதில்லை.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட முக்கிய காரணமாக இருக்கும் இந்திய விலங்குகள் நல வாரிய தூதராக சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யா நியமிக்கப்பட்ட போதும் சர்ச்சை வெடித்தது. அப்போது அவர், “இந்த தூதர் பதவி என்பது, திரைப்படங்களில் வரும் விலங்குகள் தொடர்பான காட்சிகள் உண்மையிலேயே விலங்குகளை வைத்து கொடுமைப்படுத்தி எடுக்கிறார்களா அல்லது, கிராஃபிக்ஸா என்று கவனிப்பது மட்டுமே எனது பொறுப்பு” என்று சொல்லி சமாளித்தார்.
இந்த நிலையில்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வலுக்க ஆரம்பித்தது. தன்னெழுச்சியாக மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களுடன் அந்தந்த பகுதி மக்களும் இணைந்தனர்.
அரசியல் தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர். அதுவரை அமைதியாக இருந்த நடிகர் ரஜினிகாந்த், தானும் ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக பேசினார்.
இந்த நிலையில், இன்று சௌந்தர்யா ரஜினிகாந்த், தான் பீட்டா அமைப்பில் உறுப்பினர் இல்லை என்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board of India- ஏ.டபிள்யூ. பி. ஐ.) என்பதுதான் அதிகாரப்பூர்வமான அரசு அமைப்பாகும். இதன் கீழ் வரும் பீட்டா போன்ற அமைப்புகள், ஜல்லிக்கட்டுக்கு எதிராக தடை பெறுவதில் முக்கிய பங்கு வகித்தன. இதற்கெல்லாம் ஆதாரமாக இருப்பது இந்திய விலங்குகள் நல வாரியம்தான்.
ஆனால் அதில் தூதர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, பீட்டா அமைப்பில் தான் உறுப்பினர் இல்லை என்று மட்டும் சௌந்தர்யா தெரிவித்திருக்கிறார்.
இப்போது இது குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
“விலங்குகள் நல வாரிய தூதர் பதவியில் இருந்து சௌந்தர்யா விலகுவாரா” என்பதே அவர்களது கேள்வி.
இதற்கு சௌந்தர்யாதான் பதில் சொல்ல வேண்டும்.