பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளைக் கொண்டு ஆயிரக்கணக்கானோரின் மொபைல் தரவுகளை ஓசையின்றி வேவு பார்த்த விவகாரம் உலகையே உலுக்கி வரும் நிலையில் இந்த மென்பொருளைத் தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் கணக்கை அமேசான் நிறுவனம் முடக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இந்த ஸ்பைவேரின் உரிமத்தை வழங்கியதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை இந்த நிறுவனம் லவடிக்கொண்டு போயிருக்கிறது.
மேலும் இந்த ஸ்பைவேரைக் கொண்டு மெகுல் சோக்சியோ, நீரவ் மோடி போன்றவர்களோ அல்லது தாவுத் இப்ராகிம் போன்றவர்களோ உளவு பார்க்கப்படவில்லை என்பதும் இந்த மென்பொருளை பயன்படுத்தியதன் மூலம் மக்களின் வரிப்பணத்தை தங்கள் சொந்த லாபத்திற்காக சிலர் வாரி இறைத்திருப்பதாக சமூக வலைத்தளங்கள் பரபரக்கின்றன.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் வலைதளத்தைப் பயன்படுத்தி அவர்கள் கண்காணிக்க தீர்மானித்திருக்கும் எண்களுக்கு நம்பத்தகுந்த தகவல்களை அனுப்பி அதன் மூலம் அவர்களின் மொபைல் போனில் உள்நுழைகிறது பெகாசஸ்.
ஆன்டிராய்ட் மட்டுமன்றி ஐபோன்களிலும் லாவகமாக நுழையும் பெகாசஸ், முக்கியமாக ஐபோனை அமேசானின் கிளவுட்பிரன்ட் வாயிலாகத் தாக்குகிறது.
இந்த விவரங்களை தனது தடயஆய்வு மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட அம்னெஸ்டி இன்டர்நேஷனல், அமேசான் நிறுவனத்திடம் இதுபற்றிய விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து என்.எஸ்.ஓ. மற்றும் அந்த குழும நிறுவனங்கள் சார்ந்த அனைத்து வர்த்தக இணைப்புகளையும் தங்கள் தளத்தில் இருந்து முடக்கியுள்ளது அமேசான்.
அரசாங்கங்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் அரசு தரும் எண்களை மட்டுமே உளவு பார்ப்பதாகக் கூறும் இந்த இஸ்ரேலிய நிறுவனம் சம்பந்தப்பட்ட எண்களுக்கு சொந்தக்காரர் மீது இதற்குமுன் ஏதாவது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழங்கப்படும் எண்களை கண்காணித்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அதன் வாடிக்கையாளர்களுடன் கைகோர்த்து சுருட்டி வருவது தற்போது அம்பலமாகியிருக்கிறது.