ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர். மாயமான பலரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். கடந்த 2ம்ஆண்டாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கடந்த 30-ம் தேதி முதல் பனிலிங்க யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வருகின்றனர்.
இதனிடையே, இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கப்பட்டது. இந்நிலையில், அமர்நாத் யாத்திரை குகை அருகே நேற்று ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த 20க்கு மேற்பட்ட முகாம்களை வெள்ளம் அடித்துச் சென்றது. வெள்ளப்பெருக்கால் நிலச்சரிவு ஏற்பட்டதில் அமர்நாத் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40பேரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய NDRF டிஜி அதுல் கர்வால், இதுவரை 17இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, சுமார் 40பேர் இன்னும் காணவில்லை. நிலச்சரிவு இல்லை, ஆனால் மீட்பு பணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் மழை தொடர்கிறது. 4 NDRF குழுக்கள் 100க்கும் மேற்பட்ட மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, இந்திய ராணுவம், SDRF, CRPF மற்றும் பலர் தொடர்ந்து மீட்புபணியில் ஈடுபட்டுள்ளர் என தெரிவித்துள்ளார்.
அமர்நாத் குகை தளத்தில் இருந்து இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டரில் காயமடைந்த பக்தர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக லடாக் செக்டரில் இருந்து ஹெலிகாப்டர்களை ஸ்ரீபள்ளத் தாக்குக்குள் செலுத்துவது கடினம் என இந்திய விமானப்படை அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.