சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிப்பில் , வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படத்தில் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த 14-ம் தேதி பழநியில் தொடங்கியது.
இதில் ஒப்பந்தமாகியிருந்த அமலாபால் தேதிகள் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலகா மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அமலா பால்.
நான் தற்போது ‘விஜய் சேதுபதி 33’ படத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். தயாரிப்பு தரப்புக்கு நான் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்று அவர்கள் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். இதை நினைத்து மிகப்பெரிய ஏமாற்றத்தில் இதை நான் எழுதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இவ்வளவு வருடங்களாக என்னுடன் பணியாற்றியவர்கள், மூத்தவர்கள், துறையில் இருக்கும் நட்புகள் என யாரும் இதுவரை இதுபோன்ற குற்றச்சாட்டை என்மீது வைத்ததில்லை.
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு நான் எனது ஒருபகுதி சம்பளத்தை வாங்கிக்கொள்ளவே இல்லை. தயாரிப்பாளர் பணப் பிரச்சினையில் இருந்ததால், அவருக்கு நான் கொஞ்சம் கடன் தந்திருக்கிறேன்.
‘அதோ அந்தப் பறவை போல’ படத்தின் படப்பிடிப்பில், நான் ஒரு எளிமையான கிராமத்து வீட்டில்தான் தங்க வைக்கப்பட்டேன். படப்பிடிப்புக்காக செலவழிக்கப்பட்ட பணம் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக நான் கூடுதலாக ஐந்து மணி நேரம் படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் வந்தேன். படத்தின் தரத்தில் சமரசம் கூடாது என்பதற்காக, படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் மொத்தச் செலவையும் நான் ஏற்றுக்கொண்டேன்.
‘ஆடை’ படத்தைப் பொறுத்தவரை, குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டேன்.
‘விஜய் சேதுபதி 33’ படத்துக்காக மும்பையில் ஆடைகள் வாங்கி, படத்தில் எனது ஆடை மற்றும் தோற்றத்துக்கான வடிவமைப்பைச் செய்து கொண்டிருக்கிறேன். திடீரென தயாரிப்பாளர் ரத்தினவேலு குமார், எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில், எனது நிபந்தனைகள் சந்திரா புரொடக்ஷனுக்கு ஏற்றவாறு இல்லை என்பதால், நான் இந்தப் படத்துக்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நான் ஊட்டியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யக் கேட்டதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் பிறகுதான் புரிந்தது.
இந்தத் தேவையில்லாத திடீர் முடிவு ஏனென்று எனக்குப் புரியவில்லை. இதற்கு ஒரே காரணமாக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றுவது என்னவென்றால், அவர்கள் இந்த முடிவை ‘ஆடை’ டீசர் வெளிவந்த பிறகு எடுத்திருக்கக்கூடும் என்பதே. (ஒருவேளை அதுதான் காரணம் என்றால்) இது சந்திரா புரொடக்ஷன்ஸின் ஆணாதிக்க, அகந்தையான பழமைவாத மனநிலையையே காட்டுகிறது. ஆதாரமில்லாத பல புரளிகள் மூலம் துறையில் என்னைப் பற்றிய பிம்பம் கெடுக்கப்படுகிறது.
மேலும், “உங்களுக்கு எதிராக எதுவுமில்லை விஜய் சேதுபதி. நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. உங்களுடன் பணியாற்றுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்தேன். எனது இந்த அறிக்கை, எனது மிகப்பெரிய வருத்தத்தில், என்னைப் பற்றி சந்திரா புரொடக்ஷன்ஸ் பரப்பிவரும் புரளிகளைப் பற்றித் தெளிவுபடுத்த எழுதப்பட்டது” எனவும் தெரிவித்துள்ளார் அமலா பால்.