டெல்லி: ராஜ்யசபா சீட் மறுப்பு: ‘நான் தகுதி குறைந்தவளா’ என காங்கிரஸ் தலைமைக்கு எதிராக மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரான நடிகை நக்மா கொந்தளித்துள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறேன் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி அகில இந்திய காங்கிரஸ் தலைமை  தமிழ்நாட்டில் ப.சிதம்பரம் உள்பட 16 வேட்பாளா்களின் பட்டியலை நேற்று (ஞாயிறு) வெளியிட்டது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரிலிருந்து இருவரும், ஹரியாணா, கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவரும் போட்டியிடுகின்றனா்.  ஏற்கெனவே ப.சிதம்பரம் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தோ்வு செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா். இப்போது அவருக்கு தமிழகத்திலிருந்து மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யாக உள்ள நிலையில், ப.சிதம்பரத்துக்கு மீண்டும் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டு இருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  18ஆண்டுகளாக கட்சிக்காக உழைக்கும் தனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை, நான் தகுதி குறைந்தவளா  என மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக உள்ள  நடிகை நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் காட்டமாக பதிவிட்டுள்ள டிவிட்டில், “எங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா ஜி, 2003/04 இல் நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபோது அவரது விருப்பத்தின்பேரில் என்னை ராஜ்யசபா உறுப்பினராக்குவதாக  தனிப்பட்ட முறையில் உறுதியளித்தார். அப்போது நாங்கள் ஆட்சியில் இல்லை. அதன்பிறகு 18 ஆண்டுகள் ஆகியும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. திரு இம்ரான் மகாராஷ்டிராவில் இருந்து  ராஜ்யசபா உறுப்பினராக தங்க வைக்கப்பட்டுள்ளார். நான் தகுதி குறைந்தவளா என்று கேட்கிறேன். “எனது 18 வருட தவமும் இம்ரான் பாய்க்கு முன்னால் குறைந்து விட்டது,” என்று  கூறியுள்ளார்.