அல்லூர் நக்கன் கோவில்

Must read

அல்லூர் நக்கன் கோவில்

திருச்சி – கரூர் புறவழிச்சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஓர் ஊர் அல்லூர். ஊரின் முன்னே பஞ்சநதீஸ்வரர் ஆலயம் என்ற சோழர் கால கோவிலுள்ளது. நாம் காண இருக்கும் கோவிலானது இக்கோவிலைக் கடந்து இடப்புறமாக ஊரின் உள்ளே மேலும் 2கி.மீ சென்றால் ஊரின் ஒதுக்குப்புறம் வயல்வெளிகளினிடையே அமையப்பெற்ற கோவிலாகும்.

பிரதோஷம், சிவராத்திரி தவிர மற்ற நாட்களில் ஈசனுக்கு அபிஷேகம் இல்லை. எந்நேரமும் கோவில் பூட்டியே இருக்கும். பாம்பு மற்றும் கதண்டு வண்டுகளின் தொல்லை உண்டு காண விரும்புவோர் கவனமாய் செல்லவும். இந்நாளில் பசுபதீஸ்வரர் என்றழைக்கப்படும் இக்கோவில் அந்நாளைய கல்வெட்டுகளின்படி உறையூர் கூற்றத்து அல்லூரான அல்லூர் நக்கன் பரமேஸ்வரர் கோவில் என அழைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலிலுள்ள 17 ம் ஆட்சியாண்டு இராஜகேசரி முதலாம் ஆதித்தன் எனக் கருதப்படுகிறார். மேலும் பராந்தகரின் 17,18,37,40,41ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

இக்கல்வெட்டுகளில் கோவிலின் நில தானங்கள், எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. அரிஞ்சயர் கல்வெட்டில் அவரது அதிகாரியான வீரசோழ இளங்கோவேள் என்கிற பராந்தக குஞ்சரமல்லன் குறிக்கப்படுகிறார். இவரின் மனைவி கங்கமாதேவியார் உடன்கட்டை ஏறி இறக்கிறார். இக்குறிப்புடன் இவர் அளித்த 20 கழஞ்சு பொன் கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. அரிஞ்சயரின் மற்றொரு கல்வெட்டில் மும்முடிச்சோழ இளங்கோ வேளார் அளித்த தானம் குறிப்புள்ளது.

கண்டராதித்தரின் கல்வெட்டில் புதுக்குடி என்ற ஊரிலுள்ள நிலத்தினை இறையிலியாக அளித்த குறிப்பு வருகிறது.  மேலும் ‘மதிரை கொண்ட ராஜகேசரி’ சுந்தர சோழரின் 17ம் ஆட்சியாண்டு கல்வெட்டு அவர் அளித்த தானத்தினை குறிக்கிறது.

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 24 ம் ஆண்டு கல்வெட்டில் இக்கோவில் இறைவன் நக்கீஸ்வரமுடைய நாயனார் என குறிக்கப்படுகிறார். இக்கோவில் ஏகதாள கற்றளி அமைப்பைச் சார்ந்தது. கோவிலின் மகாமண்டபம் பிற்காலத்தியது. கோஷ்ட சிற்பங்கள் கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலின் வெளிப்புறம் அருகேயுள்ள சிறுதெய்வ கோவிலில் பழமையான அய்யனார் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது.

 

More articles

Latest article