புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் ஷோவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 4ஆம் தேதி சந்தியா தியேட்டரில் இடம்பெற்ற இந்த பிரீமியர் ஷோவை பார்ப்பதற்கு அல்லு அர்ஜுன் வந்திருந்தார்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் அனுமதி பெறாத நிலையில் தியேட்டர் முன்பு கூட்டம் அலைமோதியது இதில் ரேவதி (35) மற்றும் அவரது மகன் ஸ்ரீ தேஜ் (13) ஆகியோர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ரேவதி மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் ஸ்ரீ தேஜ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக ரேவதியின் கணவர் டிசம்பர் 5ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதேவேளையில், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்ததோடு ஸ்ரீ தேஜ்-ன் மருத்துவ செலவை ஏற்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அல்லு அர்ஜுனை கைது செய்த போலீசார் அவரை ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்பல்லி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்பு குழுவினர் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் மீது பிரிவுகள் 105 (குற்றமற்ற கொலை), 118(1) (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) உள்ளிட்ட இதர பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.