பழனி :
சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க பெண்களை அனுப்பலாம் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார் கேரள பா.ஜ.க.எம்.எல்.ஏ. ராஜகோபால்.
இன்று காலை பழனி முருகனை தரிசிக்க வந்த கேரளா பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ. ராஜகோபால் செய்தியாளர்களிடம் கூறியது:
கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபிறகு கேரளாவில் கொலை, கொள்ளை நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல் கொலைகளும் அரங்கேறுகின்றன. இதை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கண்டு கொள்வதில்லை.
கடந்த ஒரு மாதத்தில் கேரளா முழுவதும் 120 கொலைகள் நடந்துள்ளது. கடந்த வாரம் கன்னூரில் இரண்டு அரசியல் கொலைகள் நடந்தது. பெரும்பாலான கொலைகளை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் செய்கிறார்கள். கொலையாளிகள் மீது அரசும், போலீசாரும் தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றார்.
மேலும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த விவகாரம் பல ஆண்டுகளாக பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. தற்போது இந்த பிரச்சனை உச்சநீதி மன்ற அமர்வுக்கு சென்றுள்ளது. தீர்ப்பு எப்படி இருக்குமோ தெரியவில்லை.
ஆனால், சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவர்களுக்கு சில கட்டுபாடுகள் விதித்து சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். இது பாரதிய ஜனதா கட்சியின் கருத்து அல்ல. எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. இது குறித்து மத தலைவர்கள், தேவசம்போர்டு, கேரள அரசு கலந்து முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.