லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த மலையாளத் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’. ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் இது.

சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் போட்டியிட ‘ஜல்லிக்கட்டு’ தேர்வாகி இருந்தது.

அந்தப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில் அதில் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் இடம்பெறவில்லை.

இந்த முறை குஞ்ஜன் சக்ஸேனா, ஷகுந்தலா தேவி, தி டிஸைபில், ஷிகாரா, ‘குலாபோ சிதாபோ, சப்பாக், செக் போஸ்ட், சிண்டூ கா பர்த்டே’ உள்ளிட்ட 27 படங்கள் போட்டியிட்டன. இதில் இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ளது.