லக்னோ
பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி மூலம் தாம் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டி இட்டன. ஆனால் அந்த கூட்டணி மொத்தம் போட்டியிட்ட 78 தொகுதிகளில் 15 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இது கூட்டணி தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தமது கட்சி கூட்டணி இன்று தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி அகிலேஷ் யாதவால் அவருடைய மனைவியைக் கூட வெற்றி பெற வைக்க முடியாத அளவுக்கு மட்டுமே செல்வாக்கு உள்ளதாக விமர்சித்தார்.
இந்த கூட்டணி அமைக்கப்பட்ட போது சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தமக்கு மாயாவதி மீது மிகுந்த மரியாதை உள்ளதாக தெரிவித்திருந்தார். லக்னோவில் நடந்த ஈத் விழாவில் கலந்துக் கொண்ட அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அகிலேஷ் யாதவ், “நான் ஒரு விஞ்ஞான மாணவன் பலமுறை முயற்சிகள் வெற்றி அடையாமல் போனதைப் பற்றி நான் படித்துள்ளேன். ஆனால் அதன் மூலம் அடுத்த விளைவுகளை அறிந்துக் கொள்ள முடியும் என்பதும் எனக்கு தெரியும். அவ்வகையில் கூட்டணி அனுபவம் எனக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.
இந்த படத்தின் மூலம் நான் இனி அரசியலில் எவ்விதம் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டேன். கூட்டணி பற்றி அறிவித்த போது எனக்கு மாயாவதி மீது மிகவும் மரியாதை உண்டு என சொன்னதையே இப்போதும் சொல்கிறேன். அவர் எனக்கு அளிக்கும் மரியாதையை நானும் அளிப்பேன்”” என தெரிவித்தார்.