சென்னை: தமிழ்நாட்டில், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று மதியம் முதல்வர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் இன்று மாலை நடக்கவிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆமுனால், காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சமீபத்தில், தொகுதி பங்கீடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறி வந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை, அது அவர்களின் சொந்த கருத்து என கூறி திமுகவுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் செல்வபெருந்தகை கருத்துக்கு எதிராகவே பேசி வருகிறார்.
இதற்கிடையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக, கடந்த மாதம் (பிப்ரவரி 28) இருதரப்பும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை பேசி முடித்திருந்தனர். அதிக சீட்டுகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் விடாப்பிடியாக இருப்பதால் இருதரப்புக்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை என தகவல்கள் பரவியது.
இதை உறுதி செய்யும் வகையில், கிரிஷ் சோடங்கர் டெல்லியில் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருந்தார். அதாவது, திமுக கொடுக்கும் 25 இடங்களையெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மார்ச் 3 ஆம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை தெரிவிக்குமாறு திமுக தரப்பு காங்கிரஸிடம் கறாராக கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் திமுக கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பரபரப்பான சூழலில், மூத்த தலைவரான ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து ப.சிதம்பரம், முதல்வர் மு.க.ஸ்டாலினை சற்று நேரத்தில் சந்திக்க உள்ளார்.
[youtube-feed feed=1]