டெல்லி:
டெல்லி ஆம்ஆத்மி அரசில் இருந்து நீர்வளத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா நேற்று நீக்கபட்டார். அவர் பாஜ ஏஜென்டாக செயல்பட்டதாக கூறி முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து இன்று ஊழல் விபரங்களை வெளியிடுவேன் என்று மிஸ்ரா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று அவர் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து நேற்று முன் தினம் ரூ. 2 கோடியை ரொக்கமாக கெஜ்ரிவால் பெற்றுக் கொண்டார்.
அவர் சுகாதாரம் மற்றும் பொதுப் பணிதுறை அமைச்சராக இருக்கிறார். அவர் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து பணம் கொடுத்ததை நான் நேரில் பார்த்தேன். இது குறித்து டெல்லி ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளிப்பேன் என்று கூறினேன். இந்த காரணத்தால் தான் நான் அமை ச்சரவையில் இருந்து நீக்கப்பட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது,.ஏற்கனவே பஞ்சாப், கோவா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியை தழுவியது. இதற்கு அடுத்தபடியாக டெல்லி மாநகராட்சி தேர்தலில் இக்கட்சி பாஜ.விடம் படு தோல்வி அடைந்துள்ளது.